Saturday, April 14, 2012

தமிழ்ப்புத்தாண்டு விருதுகள்

தமிழக அரசு சார்பில் தமிழ்ப்புத்தாண்டு விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் சித்திரை முதல் நாள் (ஏப்ரல்-13) அன்று கொண்டாடப்பட்டது. இதில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்றார். விழாவில்,கபிலர் விருதினை முனைவர் மணவாளனும், உ.வே.சா. விருதினை புலவர் ராசும் பெற்றனர். சிறந்த பெண்மணிக்கான அவ்வையார் விருது திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுகள் ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை, 8 கிராம் தங்கப் பதக்கம், தகுதி சான்றிதழ் ஆகியவற்றையும் கொண்டது. இதுபோல் 2010-ம் ஆண்டில் வெளிவந்த 27 தமிழ் நூல் ஆசிரியர்களும் சிறப்பு செய்யப்பட்டனர். சிறந்த தமிழ் நூல்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு தலா ரூ. 30 ஆயிரமும், அவற்றின் பதிப்பகத்தாருக்கு தலா ரூ. 10 ஆயிரமும் வழங்கப்பட்டது.இவற்றை முதல்- அமைச் சர் ஜெயலலிதா வழங்கினார்.
மதுரை தமிழ்ச் சங்கத்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. அந்த சங்கத்துக்கு ரூ. 5 லட்சம் பரிசும், விருதும் கொடுக்கப்பட்டது. முன்னதாக 'துறைதோறும் தமிழ்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கத்தை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார். 'முத்திரைப் பதிக்கும் சித்திரை' என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. இதை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். கவியரங்கத்துக்கு புலவர் புலமைப்பித்தன் தலைமை தாங்கினார். பின்னர்,முதல்- அமைச்சர் ஜெயலலிதாவிடம் விஞ்சி இருப்பது அஞ்சாத துணிவே, அளவற்ற அறிவே, நெஞ்சார்ந்த கனிவே என்ற தலைப்புகளில் பட்டிமன்றம் நடந்தது. இதனை சபாநாயகர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP