அக்னி-5 சோதனை வெற்றி
இந்தியாவின் அதிநவீன ஏவுகணையான அக்னி-5, ஏப்ரல் 19-ஆம் தேதி (2012) காலை 8.05க்கு வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது. இந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஏவுகணை, ஒரு டன் எடையுள்ள ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் வாய்ந்தது. அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் வசதி பெற்றது. ஒலியை விட 24 மடங்கு வேகத்தில் பாய்ந்து குறிப்பிட்ட இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையில், 5000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கையும் துல்லியமாகத் தாக்கும் வகையில் உள்ள இந்த ஏவுகணையைப் பரிசோதித்ததன் மூலம், அதிநவீன ஏவுகணை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
அக்னி-5 ஏவுகணை 17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம்(விட்டம்), 50 டன் எடை கொண்டது. முதல் கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதால், வரும் 2014-2015ம் வருடத்தில் முழுவதுமாகத் தயாராகி ராணுவத்தில் இடம்பெறும் என்று தெரிகிறது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிடம் இத்தகையை ஏவுகணைகள் உள்ளன. இஸ்ரேலிடம் இத்தகைய நவீன ஏவுகணை உள்ளது என்று கூறப்பட்டாலும், அதிகாரபூர்வமாக அந்நாடு இதுகுறித்து தெரிவித்ததில்லை. பல்வேறு சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் இடையே வடகொரியா இத்தகைய ஏவுகணையை ஏவும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.