டி.எஸ்.பி ஆன போலீஸ்காரர்
சென்னை மாநகர காவல்துறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறவர் குமார். செங்கம் தாலுக்கா பீமரப்பட்டி கிராமம்தான் இவரது சொந்த ஊர். 3 அண்ணன்கள், 2 அக்காக்கள் என பெரிய குடும்பம். தந்தை பொன்னுசாமி இவரின் இளம்வயதிலேயே இறந்துவிட்டார். பிஏ பொருளாதாரமும், எம்ஏ பொது நிர்வாகமும் படித்திருக்கும் குமார், குரூப் 1 சர்வீஸ் மூலம் சாதிக்க கடந்த 2008ஆம் ஆண்டு முயற்சி செய்தார். 2009 நவம்பர் மாதம் 15ஆம் தேதி குமார் குரூப் 1 தேர்வில் போலீஸ் டிஎஸ்பி செலக்ஷனுக்கு தேர்வு பெற்றார். அதுவும் கேட்டரி 1 என்று சொல்லப்படும் பிரிவில் தேர்ச்சி பெற்றார். ஆனால், மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல இந்த செங்கம் தாலுகா தென்னார்காடு மாவட்டத்தில் வருவதாக குமாரின் அனைத்து சான்றுகளிலும் இருந்துள்ளது. ஆனால், 1989க்கு பிறகு இந்த தாலுகா திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ந்துவிட்டது. இந்த மாவட்டம் இப்படி சேர்ந்ததற்கான சான்று எங்களுக்கு ஏதும் இல்லை என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துவிட்டதால், குமாரால் உடனடியாக டிஎஸ்பியாக ஆக முடியவில்லை.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடி செங்கம் தாலுகா திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ந்தது உண்மைதான் என்று தகவலை பெற்று அரசிடம் ஒப்படைத்தார். அதன்படி அந்த தகவலை பெற்றுக்கொண்ட அரசாங்கம், 20.03.2012 அன்று பிற்பகல் இனி நீங்கள் டிஎஸ்பி தான் என்று சான்று அளித்தது. குமாருடன் மொத்தம் 172 பேர் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதில் 4 பேர் எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள். குமாரும் அதேப் பிரிவைச் சேர்ந்தவர்தான். செங்கம் தாலுகா திருவண்ணாமலை மாவட்டத்தோடு சேர்ந்தது உண்மைதான், உண்மைதான் என்று படித்து ஜெயித்த பின்னும் போராடி நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு குமார் ஆளானார்.
செங்கம் தாலுக்காவில் பீமரப்பட்டி கிராமத்தின் தானிப்பாடி என்கிற சின்னஞ்சிறு ஊரில் பள்ளிக்கூடத்திற்கு 10 கிலோ மீட்டர் நடத்து சென்று படிக்க வேண்டிய சூழலில், ஒரு ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்து மற்ற எல்லோருக்கும் ஒரு முன் உதாரணமாக சாதித்திருக்கிறார் குமார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் ஆயுதப்படை பிரிவில் பாதுகாப்பு பணியில் காலை மாலை என சுயற்சி முறை பணியில் கையில் துப்பாக்கியுடன் இதுநாள் வரை குமார் நின்றுக்கொண்டிருந்தார். 20.03.2012 முதல் குமாருக்கு அதே துப்பாக்கியை ஏந்திய போலீசார் வணக்கம் செய்ய வேண்டிய தருணம் உருவாகி இருக்கிறது. இதற்கு காரணமாக திகழ்வது குமாருடைய கல்வியும், போராட்டமும் மனஉறுதியும்தான்.
நன்றி: நக்கீரன்