பிரிக்ஸ் மாநாடு- 2012
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய 'பிரிக்ஸ்' (BRICS) கூட்டமைப்பின் 4-வது உச்சி மாநாடு டெல்லியில் நேற்று (மார்ச் 29) நடந்தது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பிரேசில் அதிபர் டில்மா ரஸப், சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா, ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வதேவ் ஆகியோர் பங்கேற்றனர். இதில் மன்மோகன் சிங் பேசுகையில், 'சர்வதேச எரிசக்தி சந்தையில் பிரச்னை உருவாவதையும், அதனால், எரிசக்தி வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படுவதையும் தடுக்க அரசியல் ரீதியான பிரச்னைகளை நாம் தவிர்க்க வேண்டும். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் கொண்டு வரும் நடவடிக்கையில் இந்த கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகள், ஒரே குரலில் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும். தற்போது மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு, அமைதியான வழியில் தீர்வு காண, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பயங்கரவாதம், கடற்கொள்ளை போன்ற அச்சுறுத்தல்களை முறியடிக்க, ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்.
ஈரான் விவகாரம் குறித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், 'சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு, அமைதியான முறையில் அணுசக்தியை பயன்படுத்துவதற்கான உரிமை ஈரானுக்கு உள்ளது. இதை 'பிரிக்ஸ்' கூட்டமைப்பு அங்கீகரிக்கிறது. ஈரான், சர்வதேச அணுசக்தி கழகம் ஆகியவற்றுக்கு இடையே எழுந்துள்ள பிரச்னைகள் உட்பட, இதுகுறித்த அனைத்து பிரச்னைகளுக்கும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. மேலும் 'பிரிக்ஸ்' நாடுகள் இடையிலான வர்த்தகத்தில், உள்ளூர் கரன்சி மதிப்பில் கடன் உத்தரவாதம் வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதனால் பிரிக்ஸ் நாடுகளிடையே அவற்றின் கரன்சிகளின் அடிப்படையில் நடைபெறும் ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த வர்த்தகத்தில் வளர்ச்சி ஏற்படும் என கருதப்படுகிறது.'பிரிக்ஸ்' மாநாட்டில், ஐந்து நாடுகளிடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. இதன்படி, இந்நாடுகளிடையிலான வர்த்தகம், உள்ளூர் கரன்சிகளின் அடிப்படையில் மேற்கொள்வதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த வர்த்தகத்தில், அந்தந்த நாட்டு கரன்சிகளின் மதிப்பில், கடன் உத்தரவாதம் வழங்கப்படும். இது, "பிரிக்ஸ்' நாடுகளின் வங்கி கூட்டமைப்பு மற்றும் எக்சிம் வங்கிகளின் வாயிலாக செயல்படுத்தப்படும். இதன் மூலம், எதிர்காலத்தில், "பிரிக்ஸ்' நாடுகளின் வர்த்தகம், அமெரிக்க டாலர் அடிப்படையில் மேற்கொள்வது மெல்லக் குறைந்து, சம்பந்தப்பட்ட நாடுகளின் கரன்சி மதிப்பின் அடிப்படையில், பரிவர்த்தனை மேற்கொள்ள வழி ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், "பிரிக்ஸ்' நாடுகள் இணைந்து பொதுவான வங்கியை உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்கப்படும். "பிரிக்ஸ்' நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தகம், தற்போது, 23 ஆயிரம் கோடி டாலராக உள்ளது. இது வரும் 2015ம் ஆண்டில், இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்து, 50 ஆயிரம் கோடி டாலராக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பின் முதல் மாநாடு ரஷியாவிலும், இரண்டாவது மாநாடு பிரேசிலிலும், மூன்றாவது மாநாடு சீனாவிலும் நடைபெற்றது. தற்போது நான்காம் மாநாடு இந்தியாவில் டெல்லியில் நடைபெற்றுள்ளது.