மாறுகிறது டி.என்.பி.எஸ்.சி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக ஆர்.நடராஜ் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
திறமையும் நேர்மையும் மிக்கவர்கள் அரசுப் பணியில் சேரும் சூழ்நிலை உருவாக்கப்படும். தேர்வாணையத்தில் உடனடியாக சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு பற்றி சூழ்ந்து நிற்கும் புகை மண்டலம் அகற்றப்படும். வெளிப்படையான நிர்வாகம் மேற்கொள்ளப்படும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடைபெறும் அறைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். நேர்முகத் தேர்வின்போதும் கேமரா பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு தேர்வும் முடிந்தவுடன் அந்த தேர்வுக்குரிய விடைகள் இணைய தளத்தில் உடனடியாக வெளியிடப்படும். விடைகள் பற்றி தேர்வு எழுதியவர்கள் குறைபாடுகளை சுட்டிக்காட்டினால் வல்லுனர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட விடைகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
தேர்வு எழுதியவர்கள் திருத்தப்பட்ட விடைத்தாள்களை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆண்டுதோறும் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள பல்வேறு தேர்வுகள், தேர்வு முடிவுகள், வெளியாகும் உத்தேச தேதி ஆகியவற்றை உள்ளடக்கிய கால அட்டவணை வெளியிடப்படும். அரசுப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிப்பொறுப்புகளை கருத்தில் கொண்டு தேர்வுக்கான பாட திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படும். பணிக்கு வருபவர்களின் பகுத்து அறியும் திறனை ஆராயும் வகையில் தேர்வு முறையில் உரிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். தேர்வாணையம் மூலம் பல்வேறு தேர்வுகள் நடத்தினாலும் கல்வித் தகுதி ஒன்றாகவே இருக்கிறது. எனவே ஒருமுறை விண்ணப்பித்தால் போதும் அவர்களுக்கு ஒரு குறியீடு வழங்கப்படும். அடுத்த பதவிக்கு தேர்வு எழுத அந்த குறியீட்டின் அடிப்படையிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம். தேர்வாணைய இணைய தளம் புதுப்பிக்கப்படும். அதில் தேர்வாணையத்தின் செயல்பாடுகள், பணிக்கான விதிகள், பாடமுறை, மாதிரி விடைத்தாள்கள், முந்தைய வருட வினாத்தாள்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியிடப்படும்.
தற்போது ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சில சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நேர்மையாக படித்து நல்ல முறையில் தேர்வு எழுதினால் அரசுப்பணியில் சேர வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு நடராஜ் கூறினார்.