Sunday, January 22, 2012

தனியார் கல்லூரியில் நர்சிங் படித்தவருக்கும் அரசுப் பணி

தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் அரசுப் பணி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: 
தற்போது அரசு நர்சிங் கல்லூரிகள், அரசு நர்சிங் பள்ளிகளில் படிப்பை முடித்தவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ நிறுவனங்களிலும் நர்ஸ் பணியில் நியமிக்கப்படுகின்றனர். அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் நர்சிங் கல்லூரிகள் மற்றும் நர்சிங் பள்ளிகளில் படிப்பை முடித்தாலும், அரசு கல்லூரிகளைப் போல மருத்துவ கல்வி இயக்குனரகம் நடத்தும் தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுகின்றனர். 2 பேருக்கும் மருத்துவ கல்வி இயக்குனரகமே தேர்ச்சி சான்றிதழை வழங்குகின்றது. ஆனால் அரசு வேலை வாய்ப்பு வரும் போது தனியார் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு நர்ஸ் பணி வழங்கப்படுவதில்லை.
அரசு கல்லூரிகளில் படித்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் நர்ஸ் பணி வழங்குவதை போல தங்களுக்கும் அரசு பணி வழங்க வேண்டும் என்று தனியார் நர்சிங் கல்லூரிகள் மற்றும் நர்சிங் பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அரசு கல்லூரிகளில் படித்தவர்களுக்கு வேலை வழங்கும் போது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு வேலை வழங்கப்படாதது இந்திய அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று அரசு கருதுகிறது. எனவே வரும் காலங்களில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ நிறுவனங்களில் நர்ஸ் காலி இடங்கள் ஏற்படும் போது அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் நர்சிங் படித்து முடித்தவர்களை நிரப்புவது என்று அரசு முடிவு செய்துள்ளது. 2 தரப்பினரும் புதிதாக அமைக்கப்பட உள்ள மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP