டிஎன்பிஎஸ்சி தலைவராக ஆர்.நடராஜ் நியமனம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக முன்னாள் டி.ஜி.பி ஆர்.நடராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதன் பேரில் தேர்வாணைய அலுவலகம், தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வீடுகளில் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த நிலையில் தேர்வாணையத் தலைவராக இருந்து வந்த செல்லமுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து தேர்வாணையத்தின் புதிய தலைவராக ஆர்.நடராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். தமிழ்நாடு தீயணைப்புத் துறை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்திய அரசியல் சட்டம் 316(1)-ன் படி, தமிழக ஆளுநர் இவரை பதவியில் நியமித்துள்ளதாகவும், தனது 62 வயது நிறைவு பெறும் வரை நடராஜ் தேர்வாணையத் தலைவர் பதவியில் இருக்கலாம் என்றும் ஆளுநர் உத்தரவை சுட்டிக்காட்டி அரசின் தலைமைச் செயலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.