சென்னை தாகம் தீர்க்க ரூ.330கோடியில் நீர்த்தேக்கம்
சென்னை மக்களின் தாகம் தீர்க்க கும்மிடிப்பூண்டியில் ரூ.330 கோடி செலவில் இரண்டு ஏரிகளை இணைத்து நீர்த்தேக்கம் அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப குடிநீரின் தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பல்வேறு குடிநீர் வழங்கும் திட்டங்களை செயல்படுத்திட
முதல்வர் ஜெயலலிதாஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். மேலும், மழைக்காலத்தில் கிடைக்கும் உபரி நீர் மற்றும் கிருஷ்ணா குடிநீர்த் திட்டத்தின் மூலம் கிடைக்கும் அதிகப்படியான நீரை தேக்கி வைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் கண்ணன் கோட்டை மற்றும் தேர்வைகண்டிகை ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளான கண்ணன் கோட்டை மற்றும் தேர்வைகண்டிகையை இணைத்து 330 கோடி ரூபாய் செலவில் ஒரு நீர்த்தேக்கம் அமைக்க நிர்வாக ஒப்புதல் அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீரை இருமுறை நிரப்புவதன் மூலம் ஓராயிரம் மில்லியன் கன அடி (1.00 டிஎம்சி) தண்ணீரை தேக்கி வைக்க இயலும். புதியதாக அமைக்கப்பட உள்ள இந்த நீர்த்தேக்கம் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி வட்டம் பாலவாக்கத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலும், ஊத்துக் கோட்டை கிராமத்திலிருந்து 14 கீ.மீ தொலைவிலும் அமையப்பெறும்.