துனீசியா-எகிப்து:காந்தி வழி
துனீஷியா முதல் எகிப்து வரையிலான கொடுங்கோல் அரசுகளை வீழ்த்த மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கைதான் அந்த நாட்டு மக்களுக்கு பயன்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கூறினார். மகாத்மா காந்தியின் பிறந்த நாள் (அக்டோபர் 2) விழாவையொட்டி நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச அகிம்சை தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பான்-கி-மூன் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘அமைதியான வழிமுறைகளைப் பின்பற்றுவதில் மகாத்மா காந்தி உறுதியுடன் இருந்தார். துனீஷியா, எகிப்து நாடுகளைச் சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த மக்கள் விரோத ஆட்சிகளை அகற்ற அகிம்சை முறைகளைக் கையாண்டதன் மூலம் இதேபோன்று பாதிக்கப்பட்டுள்ள மற்ற சில நாடுகளின் மக்களையும் சிந்திக்கத் தூண்டினர். போரைக் கைவிட்டு புத்த மதத்தை தழுவிய மாமன்னர் அசோகர், அமைதிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தார். இந்தியாவின் இந்த பாரம்பரிய முறையை சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்த மகாத்மா காந்தி பயன்படுத்தி வெற்றிபெற்றார்’ என காந்திக்கு புகழாரம் சூட்டினார் பான்-கி-மூன்.