காஷ்மீர் சிறப்புச் சட்டம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை (ஏ.எப்.எஸ்.பி.ஏ) விலக்கிக்கொள்ள வேண்டும். இதனால் மாநிலத்தில் ராணுவத்தின் பங்களிப்பிற்கு பாதகம் ஏற்படாது என அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். ஒமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜம்மு-காஷ்மீரில் தற்போது அமைதி நிலவுகிறது. முன்பு போல் இல்லாமல் ராணுவத்தினர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்கின்றனர். இதனால் மாநிலத்தின் சில பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை மத்திய அரசு விலக்கிக் கொள்ள வேண்டும். அதுதான் ராணுவத்திற்கு நல்லது. இதனால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தின் பங்களிப்பிற்கு பாதகம் ஏற்படாது’ எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1990-ம் ஆண்டு இம்மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (Armed Forces Special Powers Act) மத்திய அரசினால் அமல்படுத்தப்பட்டது. தற்போது சிறப்பு அதிகார சட்டத்துக்கு ஓமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்தாலும், இதுகுறித்து உள்துறை அமைச்சகம்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று ராணுவம் கூறியுள்ளது.