கடாஃபி மரணம்- விசாரணை
லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 42 ஆண்டுகளாக இருந்து வந்த மம்மர் கடாஃபி (வயது 69) அவரது எதிர்ப்பாளர்களால் கொல்லப்பட்டார். தனது சொந்த ஊரான சிர்டேயில் குழாய் போன்ற பதுங்குமிடத்தில் மறைந்திருந்த அவரை லிபிய தற்காலிக அரசுப் படையினர் பிடித்தனர். சண்டையின் போது அவருக்கு தலையிலும் உடலிலும் பலத்த குண்டு காயங்கள் ஏற்பட்டதாகவும் பின்னர் இறந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சண்டையில் கடாஃபிக்கு எதிராக நேட்டோ படையினரும் ஈடுபட்டனர். இதற்கிடையே உயிருடன் பிடிபட்ட கடாஃபி சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. கடாஃபியின் மரணம் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை ஆணைய அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. சண்டையின் போது கடாஃபி கொல்லப்பட்டாரா அல்லது பிடிபட்டப்பின் கொல்லப்பட்டாரா என்பது விசாரிக்கப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.