ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு
நாகப்பட்டினத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை ராணுவத்தில் சிப்பாய் பிரிவு பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகப்பட்டினத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை ராணுவத்தில் சிப்பாய் பிரிவில் நர்சிங் உதவியாளர், கிளார்க், ஸ்டோர் கீப்பர், பொதுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நர்சிங் உதவியாளர் பணியிடத்திற்கு அறிவியல் பாடம் எடுத்து 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது 17 முதல் 23க்குள் இருக்க வேண்டும். இவர்களுக்கான தேர்வு 1, 2ம் தேதிகளில் நடக்கிறது. பொதுப்பணி பிரிவுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 17 முதல் 21 இருக்க வேண்டும். இவர்களுக்கான தேர்வு 3, 4ம் தேதிகளில் நடக்கிறது. கிளர்க், ஸ்டோர் கீப்பர் பணியிடத்திற்கு பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான படிப்பு படித்திருக்க வேண்டும். வயது 17 முதல் 23க்குள் இருக்க வேண்டும். இவர்களுக்கான தேர்வு 4, 5ம் தேதிகளில் நடைபெறும். குறிப்பிட்ட நாட்களில் காலை 5 மணிக்கு மேல் நுழைவுச் சீட்டு வழங்கப்பட மாட்டாது.