3பேருக்கு மருத்துவ நோபல்
தொற்றுநோய்கள் மற்றும் புற்றுநோயை தடுப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் புதிய வழிமுறைகளுக்கு துணைபுரியும் வகையிலான நோய் எதிர்ப்பு மண்டலத்தை கண்டுபிடித்தற்காக, 2011-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசை மூன்று விஞ்ஞானிகள் பகிர்ந்துகொள்கின்றனர்.அமெரிக்காவின் புரூஸ் பியூட்லர் மற்றும் பிரான்சின் ஜூல்ஸ் ஹாஃப்மேன் ஆகிய இருவருக்கும் சேர்த்து ஒரு பகுதி பரிசுத் தொகையும், கனடாவில் பிறந்த ரால்ஃப் ஸ்டெயின்மென் என்ற விஞ்ஞானிக்கு பாதியளவு பரிசுத்தொகையும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது என நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை முடுக்கிவிடுதல் தொடர்பான கண்டுபிடிப்புக்காக புரூஸ் பியூட்லர் மற்றும் ஜூல்ஸ் ஹாஃப்மேன் இருவருக்கும், டென்ட்ரிக் செல்களையும் அதன் நோய் எதிர்ப்புத் தன்மையையும் கண்டறிந்ததற்காக ஸ்டெயின்மெனுக்கும் நடப்பு ஆண்டுக்கான மருத்துவ நோபல் வழங்கப்படுகிறது. இம்மூன்று விஞ்ஞானிகளின் நோய் எதிர்ப்பு மண்டலம் தொடர்பான கண்டுபிடிப்புகள், நோய்த் தொற்றுகள், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை தடுப்பதற்கும், அவற்றுக்கு சிகிச்சை அளிக்கவும் புதிய பாதையை அமைத்து தந்தன என்று நோபல் கமிட்டியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.