ஜொலிக்கும் உலோகத்துறை
இந்திய உலோகத்துறையில் 2010-11-ல் ரூ.5,023.34 கோடி அன்னிய நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டைவிட இது 150சதவீதம் அதிகம். 2010-ல் உருக்குத்துறைக்குக் கிடைத்த ரூ.1,999 கோடி முதலீடும் இதில் அடக்கம். இந்த தகவலை மத்திய உருக்குத்துறை அமைச்சர் வேணி பிரசாத் வர்மா மக்களவையில் வெளியிட்டார்.
2008-09 நிதியாண்டில் உலோகத்துறைக்குக் கிடைத்த அன்னிய நேரடி முதலீடு ரூ.4,152.56 கோடி ஆகும். உருக்குத்துறை ஜாம்பவான்களாகத் திகழும் போஸ்கோ, ஆர்சிலர்-மிட்டல் ஆகிய நிறுவனங்கள் 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. இதில் ரூ.84,000 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 180 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்யும் திட்டத்தை போஸ்கோவும், ரூ.1.2 லட்சம் கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 300 லட்சம் மெட்ரிக் டன் உருக்கு உற்பத்தி செய்ய ஆர்சிலர்-மிட்டல் நிறுவனமும் இலக்குகளை நிர்ணயித்துள்ளன.