ஆஸ்கர் விருது
83வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. “தி கிங்ஸ் ஸ்பீச்” என்ற இங்கிலாந்து படத்துக்கு சிறந்த படத்துக்கான ஆஸ்கார் விருது கிடைத்தது. இத்துடன் சிறந்த நடிகர், சிறந்த டைரக்டர், சிறந்த திரைக்கதை ஆகியவை உள்பட 4 விருதுகள் இந்த படத்துக்கு கிடைத்தன. சிறந்த நடிகருக்கான விருதை "தி கிங்ஸ் ஸ்பீச்" படத்தில் நடித்த காலின் பிர்த் பெற்றார். சிறந்த நடிகைக்கான விருதை “பிளாக் சுவான்” படத்தில் நடித்த நாதலி போர்ட்மேன் பெற்றார். சிறந்த டைரக்டருக்கான விருது “தி கிங்ஸ் ஸ்பீச்” படத்தை இயக்கிய டாம் கூப்பருக்கு கிடைத்தது. சிறந்த திரைக்கதை விருது “தி கிங்ஸ் ஸ்பீச்” படத்துக்கு கதை எழுதிய டேவிட் சீட்லருக்கு கிடைத்தது. சிறந்த ஒளிப்பதிவு சிறந்த சவுண்ட் எடிட்டிங் சிறந்த சவுண்ட் மிக்கிங் ஆகிய 3 விருதுகளும் “இன் செப்சன்” படத்துக்கு கிடைத்தன.
இதில் சிறந்த பின்னணி இசைக்காக இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இவ்வாண்டிற்கான சிறப்பு பின்னணி இசைக்கான விருதை டிரன்ட் ரெஸ்னர் மற்றும் அடிகஸ் ரோஸ் ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர். "இன்ஸைட் ஜாப்" சிறந்த ஆவணப் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றது. "காட் ஆப் லவ்" திரைப்படம் சிறந்த குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றது.