தாமஸ் குறித்து மொய்லி
மத்திய ஊழல் தடுப்பு ஆணைய தலைவர் பி.ஜே.தாமஸ் பதவி நியமனம் சட்ட விரோதம் என்றும் அவர் பதவியில் நீடிக்க கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதையடுத்து தாமஸ் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் தாமசின் வக்கீல் வில்ஸ் மாத்யூ கூறும்போது, தாமஸ் லஞ்ச ஒழிப்பு கமிஷனர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவில்லை. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்னை பாராளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில், பி.ஜே.தாமஸ் நியமனம் சட்ட விரோதம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி விட்டதால் அவர் பதவியில் தொடர முடியாது. எனவே அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இனியும் அவரால் பதவியில் நீடிக்க முடியாது. மத்திய லஞ்ச ஒழிப்பு கமிஷனர் பதவி காலியாக இருப்பதாக விரைவில் அறிவிப்பு வெளியிடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.