ஜப்பானை சுருட்டிய சுனாமி
ஜப்பானில் நேற்று (மார்ச் 11ஆம் தேதி) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். டோக்கியோவின் வடமேற்குப் பகுதியில் சுமார் 400 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 8.9 அலகுகளாகப் பதிவானது. 33 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. கார்கள், பஸ்கள், ரயில், வீடுகள் என ஒரு நகரையே கடல் நீர் வாரிச் சுருட்டிச் சென்றது. செண்டாய் நகர விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக விமானங்களையும், கார்களையும் கடல்நீர் அடித்துச் சென்றது.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்கா, சீனா, ரஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மெக்சிகோ, கனடா, சிலி, பிலிப்பின்ஸ், மெக்சிகோ உள்ளிட்ட பசிபிக் கடலோர நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கிடையே இன்று வடக்கு ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள முக்கிய அணுஉலை வெடித்தது. இதனை தொடர்ந்து ஜப்பான் முழுவதும் அணுசக்தி ஆபத்துக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கதிர்வீச்சு ஆபத்து காரணமாக அணுமின் நிலையம் அருகே 10 கி.மீ. சுற்றளவில் வசித்து வந்த 45 ஆயிரம் பேர் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.