Friday, March 4, 2011

80-வது பொது பட்ஜெட்

2011-12-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* தனி நபர் வருமானவரி உச்சவரம்பு ரூ.1.60 லட்சத்தில் இருந்து ரூ.1.80 லட்சமாக உயர்வு
* 80 வயது வயதுக்குட்ட மூத்த குடிமக்களுக்கு வருவான வரி உச்ச வரம்பு ரூ.2.5 லட்சமாகவும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சமாகவும் உயர்வு
* மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு 65-ல் இருந்து 60ஆக குறைப்பு
* அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.1500-ல் இருந்து ரூ.3000 ஆயிரமாக உயர்வு. அங்கன்வாடி உதவியாளர்களின் சம்பளம் ரூ.750-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்வு
* சமூக வளர்ச்சி திட்டத்துக்கு 17 சதவிகிதம் அதிக ஒதுக்கீடு.
* 15 நவீன உணவு தானிய கிடங்குகள் அமைக்க திட்டம்.
* வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்திய பணத்தை மீட்க நடவடிக்கை.
* உரத்தயாரிப்பு தொழிலில் செய்யப்படும் முதலீட்டுக்கு அடிப்படை கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்படும்.
* சமூக நல மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.58 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
* கோரக்பூர் ஐ.ஐ.டி. நிறுவனத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
* கல்வி மேம்பாட்டுக்கு 24 சதவிகித அதிக நிதி ஒதுக்கீடு.
* கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் இயங்கி வரும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்துக்கு ரூ.50 கோடி மானியம்.
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் குறைந்த பட்ச தினக்கூலி ரூ.100 ஆக நிர்ணயம்.
* ஊழலை கட்டுப்படுத்த அமைச்சர்கள் குழு
* பட்டுநூலுக்கு சுங்க வரி 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு
* தேசிய மொத்த உற்பத்தி 8.6 சதவீதமாக உயர்த்த திட்டம்.
* உணவு பணவீக்கம் 9 சதவீதத்துக்கும் கீழாக குறைந்துள்ளது.
* வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் மக்களுக்கு மண் எண்ணெய், சமையல் எரிவாயு, உரம் இவற்றுக்கு மானியம் அறிவிப்பு.
* பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து ரூ.40 ஆயிரம் கோடி அரசு முதலீடு திரும்ப பெற திட்டம்.
* அன்னிய முதலீட்டு கொள்கைகளை தளர்த்த பேச்சுவார்த்தை.
* நபார்டு வங்கிக்கு ரூ.3 ஆயிரம் கோடி அரசு முதலீடு.
* செபி பதிவு பெற்ற மியுச்சுவல் பண்ட் நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.
* அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 23 சதவிகித அதிக நிதி ஒதுக்கீடு. இதற்கு தேவையான நிதிகளை திரட்ட வரிவிலக்கு பெறும் தகுதியுள்ள பாண்டுகள் ரூ.30 ஆயிரம் கோடிக்கு விற்க திட்டம்.
* மொத்த செலவுகள் ரூ.9,32,440 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 24 சதவிகிதம் அதிகம் ஆகும்

80-வது பொது பட்ஜெட்:
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தற்போது தாக்கல் செய்துள்ள பட்ஜெட் நாட்டின் 80-வது பட்ஜெட் ஆகும். மேலும் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள 6வது பட்ஜெட் என்ற சிறப்பையும் இது பெற்றுள்ளது. இதன்மூலம் இதுவரை அதிகபட்ச பட்ஜெட் தாக்கல் செய்த மூன்று நிதியமைச்சர்கள் பட்டியலில் பிரணாப் முகர்ஜியும் சேர்ந்துள்ளார். 
நாடு சுதந்திரமடைந்தபிறகு இதுவரை 79 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் இடைக்கால பட்ஜெட்களும் அடங்கும். நாட்டின் முதலாவது பட்ஜெட்டை 1947-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அப்போதைய நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார்.  அதிகபட்சம் 10 பட்ஜெட்டை தாக்கல் செய்த பெருமை மொரார்ஜி தேசாயைச் சாரும். இவருக்கு அடுத்தபடியாக ப. சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா, ஒய்.பி. சவாண், சி.டி. தேஷ்முக் ஆகியோர் தலா 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். ஆறுமுறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஆகியோருடன் சேர்கிறார் முகர்ஜி. ஆர். வெங்கட்ராமன், ஹெச்.எம். படேல் ஆகியோர் தலா 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.

ஜஸ்வந்த் சிங், வி.பி. சிங், சி. சுப்பிரமணியம், ஜான் மத்தாய், ஆர்.கே. சண்முகம் செட்டியார் ஆகியோர் தலா 2 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சரண் சிங், என்.டி. திவாரி, மது தண்டவதே, எஸ்.பி. சவாண், சசீந்திர செளத்ரி ஆகியோர் தலா ஒரு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 12 முறை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 4 மினி பட்ஜெட் 1956, 1965, 1971, 1974-ம் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP