 |
சுஜிதா |
மத்திய பணியாளர் தேர்வாணயம் (யுபிஎஸ்சி) சார்பில் 965 இந்திய குடிமைப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட முதல் நிலை தேர்வினை 3.48 லட்சம் பேர் எழுதினர். இதில் 12 ஆயிரத்து 545 பேர் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 844 பேர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதன்மைத் தேர்வில் இந்தியா முழுவதும் 1,930 பேர் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் தமிழகத்திலிருந்து 230 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் பயின்ற 68 பேரும் அடங்குவர். இவர்களில் திண்டிவனத்தைச் சேர்ந்தவ ஜெ.சுஜிதா (வயது 24) என்ற பார்வையற்ற மாணவியும் ஒருவர்.
இவர் பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. ஹிந்தி பட்டப் படிப்புகளை படித்துள்ளார். இவருடைய தந்தை நகைக் கடை வைத்துள்ளார். தனது தாயின் தொடர் ஊக்குவிப்பே தன்னுடைய தொடர் வெற்றிக்கு காரணம் என கூறியுள்ள சுஜிதா, பயிற்சி மையங்களில் மற்றவர்களைப் போலவே பயிற்சிகளை மேற்கொண்டதாகவும், மேலும் பார்வையற்றவர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஆடியோ பாடங்களை வைத்து வீட்டில் கம்ப்யூட்டர் மூலம் தீவிர பயிற்சி மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆர்வமும், தன்னம்பிக்கையும் இருந்தால் தேர்வில் வெற்றி நிச்சயம் என்றும் கூறியுள்ளார்.