Saturday, January 8, 2011

தமிழ்வழி படித்தோர் வேலைவாய்ப்புக்கு தடை

தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீத முன்னுரிமை அளிக்கும் அரசின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை மணலியைச் சேர்ந்த எம்.ஆர். விஜயலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீத முன்னுரிமை அளிப்பது தொடர்பாக தமிழக அரசு கடந்த 30.9.10-ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணை சட்ட விரோதமானது' என கூறியிருந்தார்.
மேலும், 'தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் போன்றவற்றில் ஆங்கில மொழியே பயிற்று மொழியாக உள்ளன. தவிர, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரிகளிலும் ஆங்கில வழி வகுப்புகள் உள்ளன. இந்த நிலையில், அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதென்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்துகள் 14, 16 ஆகியவற்றுக்கு எதிரானது. அரசின் உத்தரவால் ஆங்கில வழியில் படித்த பலர் பாதிக்கப்படுவார்கள். அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்' என்றும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வினோத் கே. சர்மா, அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 19-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP