சூப்பர் (பக்) மன்னிப்பு
உலகின் மிகப் பெரிய மருத்துவ இதழான லேன்செட் இதழில் 'சூப்பர் பக் வைரஸ்' குறித்த கட்டுரை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இந்த வைரஸ் இந்தியாவிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு பரவி வருவதாக அதில் கூறப்பட்டிருந்தது. மேலும் இந்த வைரஸுக்கு ‘புது தில்லி மெட்டல்லோ- பீட்டா- லேக்டோமிஸி-1' என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரை இந்திய மருத்துவச் சுற்றுலாவை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. கட்டுரைக்கு இந்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் "சூப்பர் பக்' வைரஸுக்கு புது தில்லி என பெயர் சூட்டியது தவறுதான் என்று ‘லான்செட்' மருத்துவ இதழ் ஆசிரியர் டாக்டர் ரிச்சர்ட் ஹார்டன் மன்னிப்பு கேட்டுள்ளார். புது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூப்பர் பக் வைரஸ் தொடர்பான கட்டுரை அறிவியல்பூர்வமாகவும், உண்மையானதாகவும் இருந்தது. அதனால் அந்த கட்டுரையைப் பிரசுரித்தோம். என்றாலும் அதற்கு புது தில்லி பெயர் சூட்டியது மிகப் பெரிய தவறு. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார். கட்டுரையை எழுதிய தமிழக டாக்டர் கார்த்திகேயன் குமாரசாமி, தனது ஆய்வு முடிவுகள் திருத்தி வெளியிடப்பட்டிருப்பதாக ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார்.