3மாதத்தில் சேலம் ஐ.டி பார்க்
சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையத்தில் 164.26 ஏக்கரில் தகவல் தொழில்நுட்பவியல் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைந்துள்ளது. இதன் உள்கட்டமைப்புப் பணிகள் ரூ. 10 கோடி மதிப்பில் நடந்து வருகின்றன. இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் இது செயல்படத் தொடங்கும் என தகவல் தமிழக தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா சட்டசபையில் தெரிவித்தார்.
மேலும், ‘தொழில்நுட்பப் பூங்காவுக்கு அனுமதி தரும்போது, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அரசு கேட்டுக் கொள்கிறது. அதன்படி உரிய தகுதிகள் இருந்தால், அந் நிறுவனங்கள் முன்னுரிமை தருகின்றன. அந்தப் பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு முறை அமல் செய்வது பற்றி மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது’ என்றும் அவர் கூறினார். இரண்டாம் நிலை நகரங்களில் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் மென்பொருள் ஏற்றுமதி அளவு ரூ. 908.70 கோடி என்ற நிலைக்கு உயர்ந்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.