சபரிமலை கோர விபத்து
சபரிமலையில் மகர ஜோதி பார்த்துவிட்டு திரும்பி்க்கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் மீது ஜீப் மோதி அதனால் ஏற்பட்ட நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளுவில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள புல்மேடு உப்புப்பாறை பகுதியில் வெள்ளிக்கிழமை (பொங்கலுக்கு முன்தினம்) இரவு 10.30 மணியளவில் இந்த பரிதாப சம்பவம் நடந்தது. இந்த விபத்தை தேசிய பேரிடர் நிகழ்வாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து அங்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த துயரசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் , ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தெரிவித்துள்ளனர். விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலோனோர் தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. ஒரு லட்சமும், காயமுற்றவருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கிட பிரதமர் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண தொகையாக வழங்கப்படும் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் அறிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் தலா ரூ.1லட்சம் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.