பஞ்சமி நில ஆய்வுக்குழு
பஞ்சமி நிலம் தொடர்பான பிரச்னைகளை ஆய்வுசெய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
‘தமிழகத்தில் பல்லாண்டு காலத்திற்கு முன்பு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை, பஞ்சமர்கள் அல்லாதவர்கள் பட்டா மாறுதல் செய்து வைத்திருப்பதாகவும், காலப்போக்கில் அவற்றைப் பல்வேறு தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருவதாகவும், ஆக்கிரமிப்பு செய்த நிலங்கள் பலவற்றில் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும்; ஒப்படை நிபந்தனைகள் மீறப்பட்டு, கிரயம் செய்யப்பட்டுப் பலருக்குக் கைமாற்றப்பட்டுள்ளதாகவும்; அடிக்கடி அரசுக்கு முறையீடுகள் வருவதோடு, ஏடுகளிலும் செய்திகள் வருகின்றன.
பஞ்சமி நிலம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளையும் சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு, பரிசீலனை செய்து, அவர்களிடமே திரும்ப ஒப்படைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்து, அரசுக்குப் பரிந்துரைகள் வழங்குவதற்கு, உயர்நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் குழு அமைப்பதென அரசு முடிவு செய்துள்ளது‘ - என தமிழக பேரவையில் கடந்த 7.1.2011 அன்று அளிக்கப்பட்ட ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில், தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரைகள் வழங்கிட சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி மு. மருதமுத்து தலைமையில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஐ.வி.மணிவண்ணன், வி.கருப்பன், நிலநிர்வாக ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு ஒன்றை நியமித்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.