கோல்டன் குளோப் விருது
ஆஸ்கருக்கு அடுத்த பிரபலமான சினிமா விருதாக கருதப்படுவது ‘கோல்டன் குளோப்’ விருது ஆகும். 68வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்செல்ஸில் நடந்தது. சிறந்த திரைப்படமாக ‘தி சோசியல் நெட்வொர்க்’ தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. சிறந்த டைரக்டராக டேவிட் பிஞ்சர் (தி சோசியல் நெட்வொர்க்), சிறந்த திரைக்கதை ஆசிரியராக ஆரோன் சொர்கின் (தி சோசியல் நெட்வொர்க்), சிறந்த இசையமைப்பாளராக ட்ரென்ட் ரெஸ்நார் (தி சோசியல் நெட்வொர்க்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. தி சோசியல் நெட்வொர்க் மொத்தம் 4விருதுகளை பெற்றுத் தந்துள்ளது.
சிறந்த நடிகராக காலின் பிர்த் (படம்: தி கிங்ஸ் ஸ்பீச்), சிறந்த நடிகையாக நேட்டாலி போர்ட்மென் (படம்: பிளாக் சுவான்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 2009இல் ‘ஸ்லம்டாக்’ மில்லியனர் திரைப்படத்துக்கான சிறந்த இசைக்காக, இரண்டு கோல்டன் குளோப் விருதுகளை பெற்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு இந்த ஆண்டும் 127 ஹவர்ஸ் என்ற படத்திற்காக மீண்டும் விருதுகிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதனை தி சோசியல் நெட்வொர்ட் தட்டிச் சென்று விட்டது. கோல்டன் குளோப் விருதுகள் 1944ஆம் ஆண்டுமுதல் வழங்கப்படுகின்றன. HFPA (Hollywood Foreign Press Association) என்ற பத்திரிகையாளர் அமைப்பு வழங்கி வருகிறது.