அணுசக்தி விருதுகள்
அணுசக்தி துறையில் சாதனை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. டெல்லியில் ஜனவரி மாதம் 17-ம் தேதி நடைபெறவுள்ள இந்திய அணுசக்தி கழகத்தின் 21-வது வருடாந்திர மாநாட்டில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. அணுசக்தி கமிஷனின் முன்னாள் தலைவர் அனில் ககோட்கருக்கு ஹோமிபாபா வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.
சர்வதேச அணுசக்தி கழக தலைமை இயக்குநர் யுகியா அமனோ இந்த விருதினை வழங்கி சிறப்பிக்கிறார்.மேலும் அணுஉலை தொழில்நுட்பம், அணுஉலை பாதுகாப்புக்கான விருது திலிப் சாஹா, கே.பி.தீட்சித் ஆகியோருக்கும், பாபா அணு ஆய்வு மையத்தை சேர்ந்த டாக்டர் கே.எல்.ராம்குமார், கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணுமின் ஆய்வு நிலையத்தின் முன்னாள் துணை இயக்குநரான கே.வி.காசிவிஸ்வநாதன் ஆகியோருக்கு அணுஉலை எரிபொருள் ரசாயன தொடர் நிகழ்வு தொழில்நுட்பங்களுக்கான விருதுகளும் வழங்கப்பட உள்ளன.இந்திய அணுசக்தி கழகத்தின் செயலாளர் ஆர்.கே.சிங் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.