பிரசார் பாரதி தலைவர் இடைநீக்கம்
பிரசார் பாரதி தலைவர் பி.எஸ்.லல்லி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஒளிபரப்பில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஒளிபரப்பு தொடர்பாக மத்திய ஊழல் கண்காணிப்பு தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.
அதை ஆய்வு செய்த பிரதமர் மன்மோகன் சிங் அவ்வறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து பி.எஸ்.லல்லியை பணியிடை நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
பிரசார் பாரதி அமைப்பானது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி பெற்ற ஒரு அமைப்பாகும். மத்திய அரசின் தொலைக்காட்சி (தூர்தர்ஷன்) மற்றும் ஆல் இந்தியா ரேடியோவை இது நிர்வகிக்கிறது. பிரசார் பாரதி சட்டப்படி அதன் உறுப்பினர் ஒருவரை நீக்க வேண்டும் என்றால் இந்திய ஜனாதிபதியின் பரிந்துரைப்படி சுப்ரீம் கோர்ட் விசாரணைக்குப் பிறகே நீக்க முடியும்.