561போலீசாருக்கு பதக்கம்
சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையினருக்கு குடியரசுத் தலைவர் மற்றும் முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பதக்கங்களை முதலமைச்சர் கருணாநிதி வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், 'காவல் துறையினர் ஆற்றிவரும் பணிகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அண்ணா பதக்கம், குடியரசுத் தலைவர் பதக்கம், முதலமைச்சர் பதக்கம் உள்ளிட்ட பதக்கங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அதன் தொடர்ச்சியாக கொலை, ஆதாயக் கொலை, மானபங்கம், கற்பழிப்பு, வரதட்சணை மரணம் போன்ற குற்றச் செயல்களில் திறம்பட புலனாய்வு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், புலனாய்வு அதிகாரிகள் ஆகியோரை போற்றும் வகையில் ஆண்டுதோறும் 50 பேருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புடைய பொற்கிழிகள், புத்தகங்கள் வழங்கப்படும் என்றும், இது தமிழக அரசின் பதக்கம் என்ற பெயரில் வழங்கப்படும்' என்றும் குறிப்பிட்டார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் டி. ராஜேந்திரனுக்கு 2009-ம் ஆண்டின் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தையும், சென்னை புறநகர் காவல் ஆணையர் எஸ்.ஆர். ஜாங்கிட்டுக்கு 2008-ம் ஆண்டின் சிறந்த சேவைக்கான போலீஸ் பதக்கத்தையும் முதலமைச்சர் வழங்கினார். மொத்தம் 561 பேருக்கு குடியரசுத் தலைவர் மற்றும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்பட்டன. சீனாவில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய கபடி அணியில் இடம் பெற்றிருந்த வீராங்கனை கவிதாவுக்கு ஊக்கப் பரிசாக ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டது. கவிதா, தமிழக சிறப்பு காவல் படை 5-ம் அணியில் தலைமைக் காவலராகப் பணிபுரிகிறார்.