போபால் நஷ்டஈடு ரூ.7700 கோடி தேவை
போபால் விஷவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈட்டை ரூ. 750 கோடியில் இருந்து ரூ. 7,700 கோடியாக உயர்த்தி உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தின் 26-ம் ஆண்டு நினைவுதினத்தில் (டிசம்பர் 3) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இதை மத்திய ரசாயன அமைச்சம் சார்பில் அட்டார்னி ஜெனரல் வாஹன்வதி தாக்கல் செய்துள்ளார். போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தின் பாதிப்பு குறித்து அளிக்கப்பட்ட தவறான விவரங்களின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம், அக்டோபர் 14, 1989-ல் அளித்த தீர்ப்பில் நஷ்ட ஈட்டை ரூ. 750 கோடியாக நிர்ணயித்ததாகவும், அதனை மறுஆய்வு செய்து ரூ. 7,700 கோடியாக உயர்த்த வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் இருந்து 1982 டிசம்பர் 2-ம் தேதி மீதைல் ஐசோ சயனைடு விஷவாயு கசிந்தது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். ஏராளமானோருக்கு பார்வை இழப்பு உள்பட பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்பட்டன.