தேடிவரும் வாய்ப்புகள்
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்காக தனியார் வேலைவாய்ப்பு முகாம் கிருஷ்ணகிரி, பழைய பெங்களூர் சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டிச. 4-ம் தேதி நடைபெற உள்ளது. டிவிஎஸ், அசோக் லேலண்ட், எல்அன்டி, ரிலையன்ஸ், விப்ரோ உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், ஓசூர் சிறுதொழில் நிறுவனங்களின் சங்கம் ஆகியவை பங்கேற்கின்றன.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி பெற விரும்பும் நபர்கள் நவ. 30, டிச. 1, டிச. 2 ஆகிய மூன்று நாட்களில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏற்கெனவே, நேரில் விண்ணப்பித்தவர்கள், பதிவு செய்தவர்கள், ஆன்லைனில் பதிவு செய்தோர் என அனைவருமே மீண்டும் ஆட்சியர் அலுவலகத்துக்கு 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் வந்து உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் முகாமிற்கு கல்வித் தகுதிச் சான்று, மதிப்பெண் பட்டியல், வயது சான்று, கல்வி நிறுவன மாற்று சான்று,கடிதத் தொடர்புக்கான முழு முகவரி, தொலைபேசி எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, சாதிச் சான்று ஆகியவற்றுடன் வர வேண்டும். முகாம் இடத்திலேயே நேர்காணல் முடித்து வேலைக்கான உறுதிச் சான்று வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் இரா. ஆனந்தகுமார் (தருமபுரி), வி. அருண் ராய் (கிருஷ்ணகிரி) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.