Wednesday, October 13, 2010

விரைவில் குரூப் 1?


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு இந்த ஆண்டு அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
தமிழக அரசுப் பணிகளில் 69சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இதில் ஆதி திராவிடர் பிரிவினருக்கு (எஸ்.சி) 15%, எஸ்.சி. அருந்ததியர் பிரிவினருக்கு 3%, பழங்குடியினருக்கு 1%, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பி.சி) 26.5%, பி.சி. முஸ்லிம்களுக்கு 3.5%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்.பி.சி) 20% என இடஒதுக்கீடு செய்யப்படுகிறது.மீதமுள்ள 31% இடங்கள் பொதுப்பிரிவு மூலமாக நிரப்பப்படுகின்றன.
இதில் எஸ்.சி, எஸ்.டி, பி.சி, எம்.பி.சி ஆகிய பிரிவினர் யார் வேண்டுமானாலும் போட்டி போடலாம். குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய காலியிடங்களில் யாரும் சேராத நிலையில் அல்லது தகுதியான நபர்கள் கிடைக்காத பட்சத்தில் அந்த இடங்கள் பின்னடைவு காலியிடங்கள் (பேக் லாக் வேக்கன்ஸி) என கருதப்படுகிறது.
 அந்த வகையில் எஸ்.சி, எஸ்.டி வகுப்பினருக்கான 22 துணை கலெக்டர் காலியிடங்கள் பின்னடைவு பணியிடங்களாக இருந்து வந்தன. துணை கலெக்டர் நேரடி நியமனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வு மூலமாக நடைபெறுகிறது.
 தற்போது மேற்கண்ட 22 பின்னடைவு காலியிடங்களை நிரப்பும் வகையில் காலியிடங்களின் பட்டியல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்காக சிறப்புத் தேர்வு நடத்தப்படுமா? அல்லது இந்த ஆண்டு அறிவிக்கப்பட உள்ள குரூப் 1 தேர்வுடன் சேர்த்து நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இது பற்றி எந்த முடிவும் மேற்கொள்ளப்படவில்லை என்கின்றன தேர்வாணைய வட்டாரங்கள்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP