Thursday, September 16, 2010

ஆன்லைனில் பதிவு

தமிழக அரசின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் மேற்கொள்ளும் வகையில்  http://tnvelaivaaippu.gov.in/ என்ற தனி இணையதளத்தை வேலைவாய்ப்புத்துறை உருவாக்கியுள்ளது. இதை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும். இதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பதிவில் மாறுபாடு ஏதேனும் இருப்பின் அதனை உரிய சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பகத்தை நேரில் அணுகி சரிபார்த்துக் கொள்ளலாம். 
 புதிதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி, பிறப்பு, சாதிச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இணையதளத்திலுள்ள படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல் வரும். விண்ணப்பத்தின் விவரங்கள் சரியானவை எனில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும். பதிவு அடையாள அட்டையை விண்ணப்பதாரரே உருவாக்கி அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் கூடுதல் பதிவும் செய்து கொள்ளலாம். இதற்காக ஆன்லைன் கூடுதல் தகுதிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். பதிவு செய்பவரின் கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம்.
 ஆன்லைனில் பதிவினை புதுப்பித்தும் கொள்ளலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுப்பிக்க முடியும். வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.
 விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா? என்பதை, தற்காலிகப் பதிவு எண்ணை "பயன்படுத்துவோர் அடையாளமாகவும்" (username), பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும்(password) பயன்படுத்தி, பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
  முன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் ஆன்லைனில் பதிய இயலாது என்பதால் சான்றின் நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப வேண்டும். தமிழ்நாட்டில் வசித்து வருபவர்கள் இந்த வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP