Monday, May 3, 2010

மலேசிய வேலையா? கவனம் தேவை

தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்கு வேலைக்கு செல்பவர்கள் தகுந்த ஆவணங்களுடன் செல்ல வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.
 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 மலேசியாவுக்கு பணிக்காக செல்பவர்கள் சட்டபூர்வமான இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். புதுதில்லியில் உள்ள மலேசிய உயர் ஆணையத்தின் சட்டபூர்வ விசா பெற்றிருக்க வேண்டும். பணிக்குச் செல்பவர்கள் முறையான கையெழுத்திட்ட பணிக்கான ஒப்பந்த ஆவணத்தின் நகலையும் எடுத்துச் செல்ல வேண்டும். இந்திய அரசின் பதிவு பெற்ற வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் முறையான உறுதி சான்றிதழை பெற்றிருத்தல் அவசியம்.
 இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு புறப்படுவதற்கு முன்பாக தாம் பணிபுரியவிருக்கும் நிறுவனத்தாரின் தொடர்பு விவரங்கள் அனைத்தும் உண்மையானவைதானா என உறுதி செய்து கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் ஏதேனும் ஒன்று தங்களிடம் இல்லையென்றால் மலேசியாவில் சட்டவிரோதமான நபராக கருதப்படுவார்கள். அத்துடன் கைது செய்யப்பட்டு, கடுமையான அபராதம் விதிக்கப்படுவதோடு தண்டனைக்கும் ஆளாவார்கள்.
 மலேசியாவுக்கு சென்ற பின்பு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் அங்குள்ள இந்திய தூதரக 00603-20933510, 20959749 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். அல்லது 00603-20922752 என்ற பேக்ஸ் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
 மேலும், மலேசிய தொழிலாளர் நல அலுவலகத்திற்கு 00603-88891111, 88365135 மற்றும் மலேசிய இமிக்ரெய்சன் டிபார்ட்மென்ட் ஆபரேசன் அலுவலக தொலைபேசி எண் 00603-8880555,8880556 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
 மலேசியாவுக்கு சென்ற பின்பு தாம் கையெழுத்திட்ட பணிக்கான ஒப்பந்த பத்திரம் மற்றும் பாஸ்போர்ட்டை வேறு யாரிடமும் கொடுக்க வேண்டாம். நிறுவனத்தார் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டால் நீங்கள் அதனுடைய ஜெராக்ஸ் பிரதியை எப்பொழுதும் கையில் வைத்திருக்க வேண்டும். பணிபுரியும் நிறுவனத்தில் வேறு எந்தவித பணிக்கான ஒப்பந்த பத்திரத்திலும் கையெழுத்திடக் கூடாது.
 ஊதியம் கிடைக்காவிட்டாலும், அது சம்பந்தமாக பிரச்னைகள் ஏற்பட்டாலும், பாஸ்போர்ட்டைத் தவறிவிட்டாலும் கோலாலம்பூரில் உள்ள இந்திய உயர் ஆணையத்திடம் தெரியப்படுத்த வேண்டும். இந்தியாவில் உள்ள குடும்பத்தார் மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தொலைபேசி எண்களைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மலேசியாவில் உள்ள வேலைசெய்யும் நிறுவனத்தின் முகவரி, தொலைபேசி எண்கள் ஆகியவற்றை உடனடியாக குடும்பத்தாருக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், மலேசியாவில் கடத்தல் மற்றும் போதைப் பொருள்கள் ஏதேனும் எடுத்துச் சென்றால் அதற்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
எனவே, மலேசியாவுக்கு செல்லும்போது தெரியாத நபர்களிடமிருந்து எந்தபொரு பொருளையும் வாங்கிச் செல்ல வேண்டாம். தெரிந்த நபர்களிடமிருந்து பொருள்களை எடுத்துச் செல்ல நேரிட்டால் அதனை நன்கு சோதித்துப் பார்த்து எடுத்துச் செல்ல வேண்டும்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP