Sunday, March 28, 2010

Current Affairs


நடப்பு முக்கிய நிகழ்வுகள்
(கடந்த வாரம்: மார்ச் 20- 26)
உலகம்


மார்ச் 20- மறைவு:
நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா (வயது 87) மரணம் அடைந்தார். நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த கொய்ராலா அந்நாட்டின் பிரதமராக 5முறை பொறுப்பு வகித்தவர். நேபாளத்தில் மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து குடியரைசை மலரச் செய்தவர், நேபாளத்தின் முதல் பிரதமர் என்ற பெருமைகளையும் பெற்றவர்.
மார்ச் 22- சாதனை:
அனைவருக்கும் மருத்துவ காப்பீடு அளிக்க வழிவகை செய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது வரலாற்று சிறப்பு மிக்க மசோதா என அந்நாட்டு அதிபர் ஒபாமா குறிப்பிட்டார்.
மார்ச் 22- வேதனை:
இன்று உலக தண்ணீர் தினம். சுகாதாரமற்ற தண்ணீரை பயன்படுத்துவதால்தான் உலகில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுவதாக ஐ..நா. அமைப்பு அறிக்கை வெளியிட்டது.


இந்தியா


மார்ச் 20- நியமனம்:
சட்டக்கமிஷன் தலைவராக பி.வி.ரெட்டி (வயது 70) நியமனம். இவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆவார்.
மார்ச் 21- வெற்றி:
ஒலியின் வேகத்தை விட அதி வேகத்தில் பாய்ந்து செய்யும் சூப்பர் சானிக் ஏவுகணையான பிரமோஸ் ஏவுகணையை ஒரிசாவின் வங்கக்கடல் பகுதியில் இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்தது. இந்த புதிய ரக பிரமோஸ் ஏவுகணைகள் கப்பலில் இருந்து செங்குத்தாக பாய்ந்து சென்று எதிரி நாட்டின் இலக்கை தாக்கும் திறன் கொண்டவை.
மார்ச் 21- நியமனம்:
இந்திய தொழிற்சங்க சம்மேளன (சி.ஐ.டி.யு) அகில இந்திய தலைவராக ஏ.கே.பத்மநாபன் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரளாவில் பிறந்த பத்மநாபன் தமிழ்மாநில சி.ஐ.டி.யு தலைவராக பணியாற்றியவர்.
மார்ச் 23- நினைவு தினம்:
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர் ஆங்கிலேய அரசால் லாகூரில் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று.
மார்ச் 23-அதிரடி கருத்து: 
 வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது எந்தக் குற்றமும் இல்லை என உச்சநீதிமன்றம் கூறியது. நடிகை குஷ்பு வழக்கில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் தீபக் வர்மா, செகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்தக் கருத்தை வெளியிட்டது.
மார்ச் 25- ஒப்புதல்:
இந்திய- ஜெர்மன் அறிவியல் தொழில்நுட்ப மையத்தை குர்காவ்னில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


தமிழகம்


மார்ச் 21- சலுகை:
தமிழ்நாட்டில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) படிக்கும் மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார்.
மார்ச் 23- பொதுத்தேர்வு:
 தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத் தேர்வுகள் தொடக்கம். 10லட்சத்திற்கும் அதிகமான மாணவ- மாணவியர் தேர்வெழுதினர்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP