விஏஓ பணிஒதுக்கீடு தீவிரம்
கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் மாவட்டப் பணியிட ஒதுக்கீடு வழங்கப்படலாம் என தெரிகிறது. தமிழகத்தில் காலியாகவுள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி நடந்தது.மொத்தம் 2 ஆயிரத்து 407 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதற்கு 7 லட்சத்து 76 ஆயிரத்து 156 பேர் தேர்வினை எழுதினர்.
இந்த நிலையில் தாழ்த்தப்பட்டோருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனால் பொதுப் பிரிவினருக்கான காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதியும், பின்னடைவு காலியிடங்களுக்கு நடந்த தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதியும் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்குபணியிட ஒதுக்கீடுகள் வழங்க கோரிக்கை எழுந்தது. இதனடிப்படையில் பணியிட ஒதுக்கீடு பெற்றவர்களில் யாரேனும் லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் குற்றவாளி என கண்டறியப்பட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களின் பதவியை பறிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கான பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்த உத்தரவு கிடைத்தவுடன் வி.ஏ.ஓ.க்களுக்கான பணியிடங்கள் ஒதுக்கப்படும் எனவும், அதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் நீதிமன்ற உத்தரவு இந்த வார இறுதிக்குள் பெறப்பட்டு, மாவட்ட பணியிட ஒதுக்கீடு மாத இறுதிக்குள் முடிவு செய்யப்பட்டு விடும் என தெரிகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான கிராம நிர்வாக அலுவலர்கள் ஒதுக்கப்பட்டு அதன் விவரங்கள் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அத்துடன் தேர்வாணையத்தின் பணி முடிந்து விடும்.
இதன்பின், மாவட்டத்தில் கோட்ட வாரியாக தேவைப்படும் கிராம நிர்வாக அலுவலர்களை ஆட்சியர் பிரித்துத் தருவார். கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணி உத்தரவை வருவாய் கோட்டாட்சியர் வழங்குவர். அதன்பின், 3 ஆயிரத்து 484 பேருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 45 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தெரிகிறது.