சபாஷ் கேரளா..!
நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமாகத் திகழும் கேரளா மேலும் ஒரு சாதனையைப் படைத்துள்ளது. வங்கிச் சேவையில் தன்னிறைவு பெற்ற முதல் மாநிலமாக கேரளம் மாறியுள்ளது.கேரள மாநிலத்தில் அனைத்துக் குடும்பங்களுக்கும் வங்கிச் சேவை பெறும் முயற்சி மேற் கொள்ளப்பட்டது. மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட வங்கி தொடர்பான பிரசாரத்தின் காரணமாக, அனைத்து குடும்பத்தினரும் அப்பகுதியிலுள்ள உள்ள ஏதேனும் ஒரு வங்கியில் வங்கிக் கணக்கை தொடங்கியுள்ளனர்.
இதனால் வங்கி கணக்கு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை கேரளாவில் ஏற்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட முக்கிய வங்கிகள் ஒருங்கிணைந்து மாநில அளவில் வங்கித்துறை குழுக்களை அமைத்து செயல்பட்டன. வங்கிகளின் இம்முயற்சிக்கு மாநில அரசும் ஒத்துழைப்பு அளித்தது. நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்ட கூட்டு முயற்சி காரணமாக, வங்கி கணக்கு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகளிடையே பேசிய முதல்வர் உம்மண் சாண்டி இச்சாதனை கேரளத்தின் வளமான நிதிநிலைக்கு மற்றொரு மணி மகுடம் என்றார்.