மத்திய அரசின் விருது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் மாவட்டங்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருது வழங்கி பாராட்டி வருகிறது. 2009-10-ம் ஆண்டில் மத்திய அரசின் விருதுக்காக இந்திய அளவில் 10 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் திருவண்ணாமலை மாவட்டமும் ஒன்றாகும். பெண்களின் பங்கேற்பு, கிராம அளவிலான விழிப்புணர்வு, கண்காணிப்புக் குழுவில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதுமை ஆகியவற்றின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.