Sunday, March 7, 2010

CURRENT AFFAIRS

கடந்த வார முக்கிய நிகழ்வுகள்
(28th February- 5th March 2010)


உலகம்

மார்ச் 5:
சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கொள்கை நீடிக்கும் என அந்நாட்டு பிரதமர் வென் ஜியாபோ அறிவித்தார். மக்கள் தொகையை கட்டுப்படுத்த, நாடாளுமன்ற விதிகளின் படி இந்தக் கொள்கையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

மார்ச் 3:
உகாண்டாவில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 80 பேர் பலியாகினர். 400 பேரை காணவில்லை என செஞ்சிலுவை சங்கம் தகவல் வெளியிட்டது.

இந்தியா

மார்ச் 5:
பெரும் தொழிலதிபர் ஜி.பி.பிர்லா (வயது 86) கொல்கத்தாவில் காலமானார். இவர் சி.கே.பிர்லாவின் தந்தை ஆவார். மேலும் இவர் ஜி.பி- சி.கே.பிர்லா குழுமங்களை ஏற்படுத்தியவர். இந்துஸ்தான் மோட்டார்ஸ், ஓரியண்ட் ஃபேன்ஸ், ஓரியண்ட் பேப்பர்ஸ் போன்றவை இக்குழுமத்தில் குறிப்பிடத்தக்கவை.

மார்ச் 5:
ஆண்களுக்கு செய்யப்படும் வாசக்டமி குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சையில் தவறு ஏற்பட்டதால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட 327 ஆண்களுக்கு 98 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் தினேஷ் திரிவேதி மக்களவையில் தெரிவித்தார்.

மார்ச் 5:
ஹிந்துஜா குழுமத்தின் அங்கமான அசோக் லேலண்ட் நிறுவனம் ஆண்டுக்கு 1000 கோடி வீதம் வருகிற மூன்றாண்டுகளில் 3000 கோடி ரூபாயை பல்வேறு விரிவாக்கத் திட்டங்களில் முதலீடு செய்ய இருப்பதாக இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சேஷசாயி அறிவித்தார்.

மார்ச் 4:
உத்திரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கிருபாலு மஹராஜ் ஆசிரமத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 65பேர் பலியாகினர்.

மார்ச் 4:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை முன்னிட்டு கேரளாவில் பஸ் மற்றும் டாக்சி, ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டது.

மார்ச் 3:
பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராக விளங்கிய பிரமோத் மகாஜனை சுட்டுக் கொன்ற அவரது சகோதரர் பிரவீண் மகாஜன் (வயது 50) மருத்துவமனையில் மரணம் அடைந்தார். கோமா நிலையிலேயே உயிர் பிரிந்தது.

மார்ச் 1:
இந்தியா- சவுதி அரேபியா இடையே குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா முன்னிலையில் இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், சவுதி இளவரசரும் துணை பிரதமருமான அப்துல் அஜிஸ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மார்ச் 1:
சவுதி அரேபியாவில் உள்ள கிங் சவுத் பல்கலைக்கழகம் ரியாத்தில் நடந்த விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

தமிழகம்

மார்ச் 5:
ரயில் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டு வரும் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு நான்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிரீசன் தெரிவித்தார்.


  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP