Sunday, June 10, 2018

தமிழகத்தில் குரூப் 1-ன் கீழ் வரும் 131 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதியும், 6,695 குரூப் 2 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதியும் நடைபெற்றது. இந்தத் தேர்வுகளை லட்சக்கணக்கான பட்டதாரிகள் எழுதினர். இதற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடித்துள்ளது. ஆனால், தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும் என்கிற சட்டம் அமலில் உள்ளது. அதன்படி, குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு எழுதியவர்களில் தமிழ் வழியில் பயின்றோரில் 20 சதவீதம் பேரை ரோஸ்டர் முறையின் கீழ் தேர்வு செய்ய வேண்டும். இதற்கான பணிகளை தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மேற்கொள்ள வேண்டும். இதற்கான கோப்புகள் அந்தத் துறைக்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும், அந்தக் கோப்புகள் அங்கு தேங்கியிருப்பதால் தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாகி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே சமீபத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தேர்வு கால அட்டவணையில் குரூப் 1 முதன்மைத் தேர்வு ஜூன் 9, 10-ம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுக்கும், முதன்மைத் தேர்வுக்கும் இடையிலான கால அளவு ஒரு மாதம் கூட இல்லை. தேர்வு கால அட்டவணைப்படி தேர்வை நடத்தினால் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று பிரதானத் தேர்வை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்படும். எனவே, குறைந்தது 2 முதல் 3 மாதங்கள் வரை கால அவகாசம் தர வேண்டும் என்பது தேர்வர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் சமீபத்தில் கிராம நிர்வாக அலுவலர்களாக (வி.ஏ.ஓ.) தேர்வு செய்யப்பட்டவர்களில் பலரும் கடந்த ஆண்டில் குரூப் 2 தேர்வினை எழுதியுள்ளனர். வி.ஏ.ஓ.க்கான பணியிட உத்தரவுகளை அவர்கள் பெற்றாலும் பெரும்பாலானோர் விடுப்பில் சென்றுள்ளனர். அவர்கள் குரூப் 2 தேர்வின் முடிவைப் பார்த்த பிறகு பணியில் சேர்வதற்கான முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP