Sunday, May 13, 2012

குரூப் 4 இலவசப் பயிற்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப் - 4 தேர்வுக்காக மாவட்ட நிர்வாகத்தால் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் தேர்வு பெறாத நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றும் வகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தொகுதி 4-ல் அடங்கிய பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு எழுதும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமுடையவர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மே 12 ஆம் தேதி முதல் 15-ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
முன்பதிவுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் மூன்று கணினி அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கென மூன்று கணினி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். மே 17-ம் தேதி இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள எழுத்து தேர்வு நடத்தப்படும். இந்த எழுத்து தேர்வு, பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணிக்கு நடைபெறும். தகுதித் தேர்வு எழுதுபவர்கள் தேர்வுக்கு 1 மணி நேரம் முன்னதாக வந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறை விவரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம், பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடம், நேரம் ஆகியவை குறித்த தகவல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரம்பலூர் கோட்டாட்சியர் அலுவலகம், பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்கள், பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள விளம்பரப் பலகையில் ஒட்டப்படும். இதைப் பார்த்து, தங்களது தேர்ச்சி மற்றும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடத்தையும், நேரத்தையும் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பல்வேறு அணிகளாக பிரிக்கப்பட்டு, தனித்தனி அலுவலர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகம் மூலம் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதுகுறித்து கூடுதல் விவரம் அறிந்து கொள்ள 94450 43119 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப் - 4 தேர்வு எழுத உள்ளவர்கள், மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP