முதல் சிற்றிதழ் விருது
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் நடப்பாண்டு முதல் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் சிற்றிதழுக்கான விருதினை ஏற்படுத்தியுள்ளது. இது ரூ.1.5 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டு பத்திரமும் கொண்டது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்த எழுத்தாளர் மனோன்மணி என்கிற சுகவன முருகனுக்கு முதல் சிற்றிதழ் விருதினை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கி சிறப்பித்துள்ளது.
காவேரிப்பட்டணம் அருகே உள்ள சவுளூர் நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக சுகவன முருகன் பணியாற்றி வருகிறார். கடந்த 30 ஆண்டுகளாக கவிதை, கட்டுரைகளை எழுதி வருகிறார். 'புது எழுத்து' என்னும் சிற்றிதழை, மனோன்மணி என்ற புனைபெயரில் நடத்தி வருகிறார். நோபல் பரிசு பெற்ற 'ஒரு நூற்றாண்டு காலத்தனிமை' என்னும் நாவல், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு புது எழுத்து சிற்றிதழில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்தப் பணியை பாராட்டி சிற்றிதழ்களுக்கான விருதுக்காக புது எழுத்து தேர்வு செய்யப்பட்டது.