Sunday, June 10, 2018

தமிழகத்தில் குரூப் 1-ன் கீழ் வரும் 131 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதியும், 6,695 குரூப் 2 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதியும் நடைபெற்றது. இந்தத் தேர்வுகளை லட்சக்கணக்கான பட்டதாரிகள் எழுதினர். இதற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடித்துள்ளது. ஆனால், தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும் என்கிற சட்டம் அமலில் உள்ளது. அதன்படி, குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு எழுதியவர்களில் தமிழ் வழியில் பயின்றோரில் 20 சதவீதம் பேரை ரோஸ்டர் முறையின் கீழ் தேர்வு செய்ய வேண்டும். இதற்கான பணிகளை தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மேற்கொள்ள வேண்டும். இதற்கான கோப்புகள் அந்தத் துறைக்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும், அந்தக் கோப்புகள் அங்கு தேங்கியிருப்பதால் தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாகி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே சமீபத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தேர்வு கால அட்டவணையில் குரூப் 1 முதன்மைத் தேர்வு ஜூன் 9, 10-ம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுக்கும், முதன்மைத் தேர்வுக்கும் இடையிலான கால அளவு ஒரு மாதம் கூட இல்லை. தேர்வு கால அட்டவணைப்படி தேர்வை நடத்தினால் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று பிரதானத் தேர்வை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்படும். எனவே, குறைந்தது 2 முதல் 3 மாதங்கள் வரை கால அவகாசம் தர வேண்டும் என்பது தேர்வர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் சமீபத்தில் கிராம நிர்வாக அலுவலர்களாக (வி.ஏ.ஓ.) தேர்வு செய்யப்பட்டவர்களில் பலரும் கடந்த ஆண்டில் குரூப் 2 தேர்வினை எழுதியுள்ளனர். வி.ஏ.ஓ.க்கான பணியிட உத்தரவுகளை அவர்கள் பெற்றாலும் பெரும்பாலானோர் விடுப்பில் சென்றுள்ளனர். அவர்கள் குரூப் 2 தேர்வின் முடிவைப் பார்த்த பிறகு பணியில் சேர்வதற்கான முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Read more...

Tuesday, July 3, 2012

யூரோ கால்பந்து- ஸ்பெயின் சாம்பியன்

உலக கோப்பை கால்பந்து போட்டியை அடுத்து மிகவும் பிரசித்து பெற்றது யூரோ கோப்பை கால்பந்து ஆகும். ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே பங்கேற்கும் இந்தப்போட்டி உலக கோப்பையை போலவே 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. 16 அணிகள் பங்கேற்ற 14-வது யூரோ கோப்பை கால்பந்து போட்டி போலந்து, உக்ரைன் நாடுகளில் கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்தப் போட்டியின் இறுதி ஆட்டம் உக்ரைனில் உள்ள கீவ் நகரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின்-இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முடிவில் ஸ்பெயின் அணி 4-0  என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. ஸ்பெயின் அணி 1964 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் யூரோ கோப்பையை வென்றுள்ளது. தற்போதும் இத்தாலியை வீழ்த்தி மூன்றாவது முறையாக யூரோ கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னதாக ஜெர்மனி அணி அதிகபட்சமாக 3 முறை (1972, 1980, 1996) யூரோ கோப்பையை வென்றுள்ளது. அதனை தற்போது ஸ்பெயின் அணி  சமன் செய்துள்ளது. மேலும் எந்த ஒரு அணியும் தொடர்ந்து 2 முறை ஐரோப்பிய போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது இல்லை. ஆனால் ஸ்பெயின் அணி 2008-ம் ஆண்டு மற்றும் தற்போதைய போட்டியில் வென்றதன் மூலம் அந்த சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறது.

Read more...

பாரம்பரிய சின்னம் ஆனது மேற்கு தொடர்ச்சி மலை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப் பழமையானதும், மிக நீளமானதுமான மேற்கு தொடர்ச்சி மலை குஜராத்தில் துவங்கி கன்னியாக்குமரியில் முடிகிறது. சுமார் 1,600 கி.மீ. நீளமுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி தற்போது யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை, இந்தியாவின் மழைப் பொழிவை தீர்மானிக்கும் பகுதியாகவும் உள்ளது.

Read more...

அசாம் வெள்ளம்- ரூ.500 கோடி ஒதுக்கீடு

அசாம் மாநிலத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டதால் அம்மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவும் நேரில் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்துக்கு ரூ.500 கோடி நிவாரண நிதியாக அளிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்பு வெளியிட்டார்.

Read more...

P-5 நாடுகள் 3-ஆம் மாநாடு

அமெரிக்கா, ஃபிரான்ஸ், இங்கிலாந்து, ரஷியா மற்றும் சீனா ஆகிய ஐந்து நாடுகளும் அணு சக்தி கொண்ட வல்லரசு நாடுகளாகத் திகழ்கின்றன. P-5 எனப்படும் இந்த நாடுகளின் முதல் மாநாடு கடந்த 2009-ல் லண்டனிலும், இரண்டாவது மாநாடு 2011-ல் பாரீஸிலும் நடைபெற்றன. மூன்றாவது மாநாடு வாஷிங்டனில் கடந்த ஜூன் (2012) 27-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடந்தது. மாநாட்டின் முடிவில் P-5 நாடுகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ' அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதில் பல்வேறு கடுமையான சவால்கள் இருப்பது கவலை தருகிறது. அணு ஆயுதங்களை ஒழிப்பது என்ற கூட்டு இலக்கை சாதிப்பதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அணு ஆயுத சோதனைகள் நடத்துவதை அனைத்து நாடுகளும் நிறுத்த வேண்டும். சீனா தலைமையில் ஒரு செயல்பாட்டுக் குழுவை அமைப்பதற்கான செயல்திட்டத்திற்கு P-5 நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த நாடுகள் அணுசக்தி தொடர்பான தங்களின் இரு தரப்பு மற்றும் பலதரப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டன' எனக் கூறப்பட்டிருந்தது.

Read more...

மேகாலயாவில் வெள்ளம்

மேகாலயா மாநிலத்தில் பிரம்மபுத்திரா, ஜிங்கிராம் நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் 75 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 15 தற்காலிக மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த வெள்ளப்பெருக்கில் காரோ மலைப் பகுதியில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் நீரில் மூழ்கின.

Read more...

இஸ்ரோ 3-வது ஏவுதளம்

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 60 ராக்கெட்டுகளை ஏவுவதற்கு வசதியாக 3-வது ஏவுதளத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இதனை இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 'அடுத்த 24 மாதங்களில் 24 ராக்கெட்டுகளை ஏவுவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதில் தொழில் நுட்ப செயற்கைக் கோள் மற்றும் மற்ற நாட்டு செயற்கைக் கோள்களும் அடங்கும். அடுத்ததாக விண்வெளிக்கு அனுப்ப உள்ள ஜிஎஸ்எல்வி-3 செயற்கைக் கோளை புதிதாக அமைக்க உள்ள ஏவுதளத்திலிருந்தே ஏவத் திட்டமிட்டுள்ளோம். தொழில்நுட்ப செயற்கைக் கோளைத் தொடர்ந்து சந்திராயன்-2 செயற்கைக் கோள், சூரியன் மற்றும் சனி கிரகத்தை ஆய்வு செயவதற்கு செயற்கைக் கோள்களை அனுப்புவதற்கும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது' என்றும் தெரிவித்தார் ராதாகிருஷ்ணன்.

Read more...

என்.எல்.சி. புதிய தலைவர்

என்எல்சி நிறுவனத்தின் தலைவராக, நிறுவனத்தின் சுரங்கத் துறை இயக்குநராக பணியாற்றிய பி.சுரேந்திர மோகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
என்எல்சி நிறுவனத்தின் தலைவராக கடந்த மூன்றரை ஆண்டு பதவி வகித்த ஏ.ஆர்.அன்சாரி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து நிறுவனத்தின் புதிய தலைவராக பி.சுரேந்திரமோகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Read more...

சேது திட்டம் சாத்தியமில்லை

சேது சமுத்திர திட்டத்தை மாற்று வழியில் அமைப்பது குறித்து ஆராய அமைக்கப்பட்ட பச்சௌரி குழு, சேது சமுத்திர திட்டத்தை மாற்று வழியில் அமைக்க சாத்தியம் இல்லை என்று அறிக்கையில் கூறியுள்ளது. இந்த  அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் சேது சமுத்திர திட்டத்தை மாற்று வழியில் அமைத்தால், பொருளாதாரச் செலவு, சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என்று பச்சௌரி குழு தெரிவித்துள்ளது. பச்சௌரி குழு அளித்த அறிக்கை மீது பதில் அளிக்க தமிழக அரசு கால அவகாசம் கோரியது. இதையடுத்து சேது சமுத்திய திட்ட வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read more...

Monday, June 11, 2012

பட்டம் வென்றார் ரபேல்

பாரிஸில் நடைபெற்று வந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி ஸ்பெயினின் ரபேல் நடால் 7வது முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். இது ரபேல் பெறும் 11வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். ரபேல் நடால் தான் பங்கேற்ற 7 பிரெஞ்ச் ஓபன் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம், இதற்கு முன்னர் ஸ்வீடன் வீரர் ஜான் போர்க்கின் 6 முறை பட்டம் வென்று படைத்த சாதனையை நடால் முறியடித்துள்ளார்.

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP